கத்தார் – ஈக்வடோர் போட்டியுடன் பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திருவிழா இன்று ஆரம்பம்

நெவில் அன்தனி)

விளையாட்டு உலகில் மிகப் பெரிய விளையாட்டு விழாக்களில் ஒன்றானதும் முழு உலகிலும் உள்ள கோடான கோடி கால்பந்தாட்ட இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதுமான 22ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று வரவேற்பு நாடான கத்தாருக்கும் ஈக்குவடோருக்கும் இடையிலான ஏ குழு போட்டியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.

92 வருட உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முஸ்லிம் நாடொன்றிலும் மத்திய கிழக்கிலும் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் ஆசியாவில் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் அரங்கேறுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதற்கு முன்னர் 17 நாடுகளில் உலகக் கிண்ண இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது. 18ஆவது நாடாக கத்தார் இப்போது உலகக் கிண்ணப் போட்டியை நடத்துகிறது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் இரண்டு கட்டங்களைக் கொண்டது

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் இரண்டு பிரதான கட்டங்களைக் கொண்டது. முதலாம் கட்டமாக 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றும் தகுதிகாண் சுற்று போட்டிகளாகும். இரண்டாம் கட்ட ம் இன்று ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றாகும். உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றும் இரண்டு கட்டங்களைக் கொண்டது. முதலாவதாக 8 குழுக்களில் 4 அணிகள் (நாடுகள்) வீதம் முதல் சுற்று போட்டிகள் லீக் முறையில் நடைபெறும். லீக் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 16 அணிகள் இரண்டாம் கட்டமாக நொக்-அவுட் சுற்றில் விளையாடும்.

வரவேற்பு நாடான கத்தார் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளதுடன் மற்றைய 31 அணிகள் உலகம் முழுவதும் நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

8 சம்பியன் அணிகள்

பீபா உலகக் கிண்ணம் – கத்தார் 2022 கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் 5 தடவைகள் சம்பியனான பிரேஸில், தலா 4 தடவைகள் சம்பியனான இத்தாலி மற்றும் ஜேர்மனி, தலா 2 தடவைகள் சம்பியனான உருகுவே (முதலாவது உலக சம்பியன்), ஆர்ஜன்டீனா மற்றும் ஸ்பெய்ன், தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து மற்றும் ஸ்பெய்ன் ஆகியன உட்பட 32 நாடுகள் உலக சம்பியன் மகுடத்தை சூடும் குறிக்கோளுடன் பங்குபற்றவுள்ளன.

வேற்றுக்கண்ட அணி சம்பியனாவதற்கு மற்றொரு வாய்ப்பு

உலகக் கிண்ண வரலாற்றில் பிரேஸில், ஜெர்மனி, ஸ்பெய்ன் ஆகிய 3 நாடுகளே வேற்றுக் கண்டங்களில் உலக சம்பியனாகியுள்ளன. 1958இல் சுவீடனிலும் 2002இல் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் பிரேஸில் சம்பியனாகியிருந்தது. பிரேஸில் மாத்திரமே 3 கண்டங்களில் உலக சம்பியனாகியுள்ளது.

2010இல் தென் ஆபிரிக்காவில் ஸ்பெய்னும், 2014இல் பிரேஸிலில் ஜேர்மனியும் வேற்றுக் கண்டங்களில் உலக சம்பியனான மற்றைய இரண்டு நாடுகளாகும்.

எவ்வாறாயினும் இந்த வருடம் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கத்தாரில் நடைபெறுவதால் பெரும்பாலும் வேறு கண்டத்தைச் சேர்ந்த நாடொன்று சம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் ஒன்று அந்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. 2002இல் நான்காம் இடத்தைப் பெற்ற தென் கொரியா இம் முறை பெரும்பாலும் இரண்டாம் சுற்றுக்கு செல்லும் என கருதப்படுகிறது.

ஆரம்ப விழா

சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் 50ஆவது இடத்திலிருக்கும் கத்தாருக்கும் 44ஆவது இடத்திலிருக்கும் ஈக்வடோருக்கும் இடையிலான ஏ குழு லீக் உலகக் கிண்ணப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கத்தார் நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.

அப் போட்டிக்கு முன்னர் கண்கவர் ஆரம்ப விழா வைபவம் நடைபெறவுள்ளது.

இன்றிலிருந்து டிசம்பர் 2ஆம் திகதிவரை 8 குழுக்களில் முதலாம் சுற்று லீக் போட்டிகள் நடைபெறும். இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரமே நடைபெறவுள்ளது. நாளை திங்கட்கிழமை (21) மூன்று போட்டிகளும் நவம்பர் 22 இலிருந்து டிசம்பர் 2வரை தலா 4 போட்டிகளும் லீக் சுற்றில் நடைபெறும்.

இரண்டாம் சுற்றான 16 அணிகள் பங்குபற்றும் நொக் – அவுட் போட்டிகள் டிசம்பர் 3இலிருந்து 6வரை தலா 2 போட்டிகள் வீதம் நடைபெறும்.

கால் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 9ஆம், 10ஆம் திகதிகளிலும் அரை இறுதிப் பேர்டிகள் டிசம்பர் 13ஆம், 14ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி டிசம்பர் 17ஆம் திகதியும் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி டிசம்பர் 18ஆம் திகதியும் நடைபெறும்.

8 விளையாட்டரங்குகள்

பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கத்தாரின் 5 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 விளையாட்டரங்குகளில் நடைபெறும். அல் பெய்த் விளையாட்டரங்கு, கலிபா சர்வதேச விளையாட்டரங்கு, அல் துமாமா விளையாட்டரங்கு, அஹமத் பின் அலி விளையாட்டரங்கு, லுசெய்ல் விளையாட்டரங்கு, ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கு, எட்யூகேஷன் சிட்டி விளையாட்டரங்கு, அல் ஜனூப் விளையாட்டரங்கு ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும்.

இந்த விளையாட்டரங்குகளை நிர்மாணிக்க கோடிக்கணக்கான டொலர்களை கத்தாரி செலவிட்டிருந்தது. அத்துடன் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந் நாடு செலவிட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான 31 இலட்சம் டிக்கெட்டுகளில் 29 இலட்சம் டிக்கெட்கள் விற்பனையாகிவிட்டதாகவும் இன்றைய ஆரம்பப் போட்டியை 60,000 பேர் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தாருக்கும் ஈக்வடோருக்கும் இடையிலான ஏ குழு போட்டி திங்கட்கிழமையிலிருந்து ஒரு நாள் முன்கூட்டியே ஞாயிறன்று நடைத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டியை வரவேற்பு நாடு ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்துமாறு பீபா தலைவர் இன்பன்டீனோ அழைப்பு

உலகக் கிண்ணப் போட்டி விளையாட்டு அரங்கிலும் அரங்குக்கு வெளியேயும் கத்தாருக்கு மிகப் பெரிய சவாலாக அமையவுள்ளது.

இந் நிலையில் பல்வேறு சர்ச்சைகளை உலகக் கிண்ண கால்பந்தாட்ட ஆரம்பம் புறந்தள்ளிவைக்கும் என பீபாவும் வரவேற்பு நாடான கத்தாரும் நம்புகின்றன.

மனித உரிமைகள் மற்றும் உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதால் ஏற்படும் சுற்று சூழல் வீழ்ச்சி ஆகியன குறித்து கத்தார் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருந்தது.

ஆனால், உலகக் கிண்ண அணிகளுக்கு பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனோ அண்மையில் அனுப்பிவைத்த கடிதத்தில், ‘கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்துங்கள்’ எனக் கேட்டுக்கொண்டதுடன் மேற்குலக நாடுகளின் விமர்சகர்களின் பாசாங்குத்தனத்தை குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆரம்பப் போட்டி

கத்தாருக்கும் ஈக்வடோருக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிப்பது இலகுவான காரிணயமல்ல.

ஏ குழுவில் இடம்பெறும் நடப்பு ஆசிய சம்பியனும் அரபு கிண்ண சம்பியனுமான கத்தாரை எதிர்த்து விளையாடும் 3 அணிகளும் வெற்றிபெறும் என்று கருதப்படுகிறது.

மூன்று வருடங்களுக்கு ஜப்பானுடனான இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று ஆசிய சம்பியனான பின்னர் கத்தாரின் கால்பந்தாட்டம் உயரிய நிலையில் இருந்தது. ஆனால் அண்மைய அதன் பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை.

ஜெமெய்க்காவுடனான போட்டியை 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட கத்தார், 23 வயதுக்குட்பட்ட குரோஏஷிய அணியுடனான போட்டியில் 0 – 3 என தோல்வி அடைந்திருந்தது.

மறுபுறத்தில் தென் அமெரிக்க வலய தகுதிகாண் போட்டிகளில் கடும் சவால்களை முறியடித்து இறுதிச் சுற்றில் விளையாட ஈக்வடோர் தகுதிபெற்றது.

எவ்வாறாயினும் தனது சொந்த மண்ணில் அதிகபட்ச திறமைகளை வெளிப்படுத்தி உலகக் கிண்ணப் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க கத்தார் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாடும் கத்தார் இன்றைய போட்டியில் தென் அமெரிக்க நாடான ஈக்வடோரை வெற்றி கொண்டால் அது பெரிய வரலாறாக பதிவாகும்.

‘கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்துவது, அமைதியையும் நிதானத்தையும் பேணுவது, கூச்சல் மற்றும் வதந்திகளை தவிர்ப்பது எமது அணியின் பிரதான நோக்கங்களாகும். எங்கள் நாட்டை மக்கள் விமர்சிக்கும்போது நாங்கள் அதை விரும்பமாட்டோம். நாங்கள் சிறப்பாக தயார்படுத்தல்களில் ஈடுபட்டோம். அமைதியாக இருந்து சரியானதை திட்டமிட்டோம். அதனால் இன்று உலகக் கிண்ணப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்’ என கத்தார் பயிற்றுநர் பீலிக்ஸ் சன்ச்செஸ் தெரிவித்தார்.

கத்தார் அணியில் சாத் அல் ஷீப் (கோல்காப்பாளர்), ஆப்டெல்கரிம் ஹசன், ஹசன் அல் ஹய்டொஸ், அக்ரம் அபிப், அல்மோஸ் அலி ஆகியோரும் ஈக்வடோர் அணியில் பியலோ ஹின்கெப்பி, பேர்விஸ் எஸ்டுப்பினன், மொய்செஸ் கய்சீடோ, கொன்ஸாலோ ப்ளாட்டா, என்னர் வெலென்சியா ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

நவீன தொழில்நுட்ப முறைககள்

2018 உலகக் கிண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறை இந்த வருடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெனல்டி எல்லையில் இடம்பெறும் ஹாண்ட்போல், பின்னாலிருந்து ஃபவுல் போடுதல், ஓவ்சைட் நிலைகளை நுட்பமாக அவதானித்தல் ஆகியவை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சரியாக மத்தியஸ்தர்களால் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதனையும் விட வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பையும் கள மத்தியஸ்தர் பெற்றுக்கொள்வார். அதேவேளை வீரர்களின் நகர்வுகளை மிக நுட்பமாக அவதானிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் கத்தாரில் பெண் மத்தியஸ்தர்கள் கடமையாற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.

பங்குபற்றும் அணிகளும் குழுக்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *