‘கலகத் தலைவன்’ திரை விமர்சனம்

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவிஸ்

நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ், அங்கனாராய், கலையரசன் மற்றும் பலர்.

இயக்கம்: மகிழ்திருமேனி

மதிப்பீடு: 3/5

‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’ என வரிசையாக இரண்டு வெற்றிப் படங்களை வழங்கிய உதயநிதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கலகத் தலைவன்’ படமும் வெற்றி பெற்று, அவர் ஹாட்ரிக் அடிப்பாரா, இல்லையா என்பதை காண்போம்.

கனரக வாகன உற்பத்தி சந்தையில் மிகப்பெரும் கொர்ப்பரேட் நிறுவனமான வஜ்ரா, ‘ட்ரூபேடார்’ எனும் பெயரில் வணிக வாகனமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறது. இதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிடுகிறது.

‘குறைவான எரிபொருளில் அதிக தூரம் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது’ எனும் இந்நிறுவனத்தின் அறிவிப்பு, உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கிறது.

இந்நிலையில் இந்த வாகனம் வெளியிடும் புகை, சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதும், அரசு நிர்ணயித்த மாசின் அளவை விட கூடுதலாக இருக்கிறது என்றும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

இதனை இந்த நிறுவனம் மறைத்து, சந்தைப்படுத்த திட்டமிடுகிறது.

வஜ்ரா நிறுவனம் மறைத்திருக்கும் இந்த உண்மையை சிலர் அம்பலப்படுத்துகிறார்கள். இதனால் வஜ்ரா நிறுவனம் பங்குச் சந்தையிலும் பெரும் சரிவை சந்திக்கிறது.

கொர்ப்பரேட் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என அதன் உரிமையாளர் விரும்புகிறார். இதற்காக சட்டவிரோத கும்பலொன்றை நியமிக்கிறார்.

அந்த கும்பல் ‘கலகத் தலைவன்’ அதாவது கொர்ப்பரேட் நிறுவன வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் புரட்சிக்காரனை தேடி பயணிக்கிறார்.

அவர் யார்? அவரை சந்தித்தாரா? வீழ்த்தினாரா? இதுதான் ‘கலகத் தலைவன்’ படத்தின் விறுவிறு திரைக்கதை.

க்ரைம், த்ரில்லர் ஜேனரிலான கதைகளை வடிவமைப்பதில் வல்லுநரான இயக்குநர் மகிழ் திருமேனியின் மற்றொரு சிறந்த படைப்பு. அதிலும், உதயநிதியை போன்ற வேகமாக வளரும் அரசியல் தலைவருக்கு ஏற்ற வகையில் திரைக்கதையும், அவருடைய உடல் மொழிக்கு ஏற்ற வகையிலான எக்ஷன் காட்சிகளையும் திரைக்கதையில் இடம்பெற வைத்து, ரசிகர்களை வியக்க வைக்கிறார். உதயநிதியின் புகழையும் உயர்த்தியிருக்கிறார்.

இயல்பாக தொடங்கும் கதை நேரம் செல்லச் செல்ல வேகமெடுக்கிறது. அதிலும், வில்லனான ஆரவ்வின் வருகைக்குப் பின் திரைக்கதை ஜெட் வேகம் எடுக்கிறது.

பார்வையாளர்களுக்கு லொஜிக் மீறல் இல்லாமல் பரபரப்பான காட்சிகளை அளித்து, இருக்கையின் நுனியில் அமர வைத்துவிடுகிறார், இயக்குநர். அதிலும் உச்சகட்ட காட்சி அற்புதம்.

இதற்காகவே சண்டைப் பயிற்சி இயக்குநரை கை வலிக்க கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.

உதயநிதி ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக நடித்திருக்கிறார்.

நடிகர் ஆரவ்வின் அதிரடி நடிப்பு, ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவுக்கு மற்றொரு அருமையான வில்லன் நடிகர் கிடைத்திருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம்.

இவர்களைக் கடந்து நாயகி நிதி அகர்வால் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை ஆகியவை இயக்குநருக்கு பக்கபலமாக தோள் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

அரசுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதன் பின்னணி, அதனால் பாதிக்கப்படுபவர்கள், அரசியல் கட்சிகளுக்கும் கொர்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள வணிக ரீதியான உறவு என வெகுஜன மக்கள் மற்றும் வாக்களிக்கக்கூடிய பாமர மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு நுட்பமான விடயத்தை, அருமையான க்ரைம், த்ரில்லர் ஜேனரில் வழங்கியதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

இந்தப் படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் என உறுதியாக சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *