காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு இருக்கும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் இணைந்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணம், தமிழகம் கேரளா ஆகிய மாநிலங்களைக் கடந்து செப்டம்பர் 30-ஆம் திகதி முதல் கர்நாடகத்தில் தொடர்கிறது . இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்குபற்றி வருகிறார்கள்.
தசரா திருவிழாவிற்காக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த இந்திய ஒற்றுமை நடை பயணத்திற்காக ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டிருந்தார். அவரை காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் பங்குபற்றுவதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மைசூருக்கு வருகை தந்தார்.
இதனையடுத்து மாண்டியா மாவட்டத்தில் இன்று காலையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்தார். இதன் போது கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பி கே சிவக்குமார் மற்றும் மேலிட பிரதிநிதி கே சி வேணுகோபால் உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர்.
அண்மை காலமாக உடல் நலம் குன்றியிருந்த சோனியா காந்தி, சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் அவர் தொண்டர்களுடன் பங்கு பற்றியது கட்சியினருக்கு புது உற்சாகம் ஏற்படுத்தி இருக்கிறது.