கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான ரிஷப் செட்டி நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து, பாரிய கவனத்தை ஈர்த்தத் திரைப்படம் ‘காந்தாரா’.
இப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம், ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் விழா அண்மையில் பெங்களூரூவில் நடைபெற்றது.
இதன் போது படத்தின் நாயகனும், இயக்குநருமான ரிஷப் செட்டி பங்கு பற்றி இரண்டாம் பாகத்தைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ” தற்போது வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தெய்வங்களை பற்றிய கதையாக பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் காவல் தெய்வமான பஞ்சூருளி எனும் தெய்வத்தின் நம்பிக்கை சார்ந்த தொன்மக் கதையின் பின்னணியை விவரிக்கும் வகையில் கதை உருவாகிறது. அடுத்த ஆண்டு வெளியாகும் வகையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது ” என தெரிவித்தார்.