கிறிஸ்டியானோ ரொனால்டோ

பெயர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ டாஸ் சான்டோஸ் அவெய்ரோ. சுருக்கமாக ரொனால்டோ.

பெயருக்கான காரணம்: பிரபல நடிகராக இருந்து அமெரிக்காவின் அதிபரானவர் ரொனால்ட் ரீகன். இவரது மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் ரொனால்டோவின் தந்தை. அதனால் தனக்குப் பிடித்தமான நடிகரின் பெயரையே மகனுக்கு சூட்டிவிட்டார் தந்தை.

 

 

கொழுப்பு: உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பத்து சதவீதமாக வைத்துள்ளார் ரொனால்டோ. அதனால்தான் அவரால் விரைவாக ஓட முடிகிறது. அந்தரத்தில் பறந்து கோல் அடிக்க முடிகிறது.

பிறந்த இடம் மற்றும் திகதி: போர்த்துக்கலின் தன்னாட்சிப் பகுதியான மதீராவிலுள்ள ஃபஞ்சல் நகரத்தில் 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பிறந்தார்.

செல்லப்பெயர்கள் : சிறு வயதில் கிரைபேபி,  பிரபலமான செல்லப்பெயர் CR7, கால்பந்து ரசிகர்கள் மத்தியில் GOAT, எல் பிச்சோ, நெருங்கியவர்கள் கிறிஸ், ரோன் என்று அழைக்கின்றனர்.

பார்ட்னர்: ஆறு வருடங்களுக்கு முன்பு மாட்ரிட் நகரிலுள்ள உலகப்புகழ்பெற்ற ஃபெஷன் நிறுவனமான ‘குச்சி’யின் பிரத்யேக ஷோரூமிற்குச் சென்றிருந்தார் ரொனால்டோ. அங்கே கடை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஜியோர்ஜினா என்ற பெண் மீது ரொனால்டோ காதலில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு ரஷ்ய மொடல் இரினா உட்பட பல பிரபலங்களுடன் காதலில் இருந்தார். ஜியோர்ஜினாவுடனான காதல் மட்டுமே நீள்கிறது.

 

 

உயரம்: 6 அடி, 2 அங்குலம்.

குழந்தைகள்: ரொனால்டோவுக்கு 12 வயதில் கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற மகன் இருக்கிறான். ஜூனியரின் அம்மாவுடன் செய்த ஒப்பந்தத்தின் காரணமாக அம்மா யார் என்று ரொனால்டோ வெளிப்படுத்தவில்லை. சரியான நேரம் வரும்போது அம்மா யார் என்று ஜூனியருக்கு வெளிப்படுத்துவதாக சொல்லியிருக்கிறார் ரொனால்டோ.

ஒருவேளை இரினா குழந்தையாக கிறிஸ்டியானோ ஜூனியர் இருக்கலாம் என்று கிசுகிசுவும் உள்ளது. தவிர, ஜியோர்ஜினா மூலமாக ஈவா, மேட்டியோ, அலானா, பெல்லா என்று நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஏப்ரலில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போதே ஆண் குழந்தை இறந்துவிட்டது. அந்தப் பெண் குழந்தைதான் பெல்லா.

இன்சூரன்ஸ்: 2009ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் ஃபுட்பால் கிளப், ரொனால்டோவின் கால்களை சுமார் 850 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.

பெற்றோர்: மாநகராட்சியில் தோட்ட வேலை செய்துவந்த ஜோஸ் டினிஸ் அவெய்ரோவுக்கும், சமையல் வேலை செய்துவந்த மரியா டோலோரெஸ் டாஸ் சான்டோஸ்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவர்தான் ரொனால்டோ. அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்தின் உறுப்பினர்களான ஆறு பேரும் ஓர் அறை கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். இன்று உலகின் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று, ரொனால்டோவுடையது.

‘முன்பே மூன்று குழந்தைகள், கணவனின் குடிப்பழக்கம் மற்றும் வறுமை காரணமாக ரொனால்டோ வயிற்றில் இருந்தபோது கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவரை அணுகியிருக்கிறேன். மருத்துவர் கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டார்…’ என்று பின்னாட்களில் சொல்லியிருக்கிறார் ரொனால்டோவின் தாயான மரியா. கடுமையான குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இறந்துவிட்டார் ரொனால்டோவின் தந்தை.

டட்டூ: அடிக்கடி இரத்த தானம், எலும்பு மச்சை தானம் செய்வதால் மற்ற விளையாட்டு வீரர்களைப் போல ரொனால்டோ டட்டூ குத்திக்கொள்ளவில்லை; மதுவும் அருந்துவதில்லை.

அடையாளம்: போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் கேப்டன்.

சாதனைகள்: ஃபிரான்சைச் சேர்ந்த ‘ஃபிரான்ஸ் ஃபுட்பால்’ எனும் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கும் தங்கப்பந்து விருதை ஐந்து முறை வென்றிருக்கிறார் ரொனால்டோ. தவிர, நான்கு முறை ஐரோப்பியன் தங்க காலணி, 32 கோப்பைகள், ஐந்து முறை யூஇ எஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், நாட்டுக்காகவும், கிளப் அணிகளுக்காகவும் விளையாடியதில் 800க்கும் அதிகமான கோல்களை அடித்த வீரர், சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 118 கோல்கள் அடித்த வீரர், 1100 போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ஒருவர்… என ரொனால்டோவின் சாதனைகள் அசர வைக்கின்றன. ஐந்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் கோல் அடித்த ஒரே வீரரும் ரொனால்டோதான்.

படிப்பு: குடும்ப வறுமையின் காரணமாக பெரிதாக ரொனால்டோ படிக்கவில்லை. ஒரு நேர்காணலில் ரொனால்டோவிடம் ‘உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்ன?’ என்று கேள்வி முன்வைக்கப்படுகிறது. ‘சப்ஜெக்ட் என்றால் என்ன?’ என்று கேட்கிறார் ரொனால்டோ.  ‘மேத்ஸ், சயின்ஸ்…’ என்று நேர்காணல் செய்தவர் சொல்ல, ‘ஓ… ஞாபகம் வருகிறது… ‘சின்ஸ்’ எனக்கு பிடிக்கும்…’ என்கிறார். சயின்ஸைத்தான் ‘சின்ஸ்’ என்கிறார் ரொனால்டோ.

தாய்மொழி போர்த்துகீசிய மொழி என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது ஆங்கிலம் திணறியது. இப்போது ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறார்.மட்டுமல்ல; கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரொனோல்டோவின் வாழ்க்கையைப் பற்றிய பாடம் உள்ளது.

வருமானம்: கால்பந்து விளையாட்டின் மூலமாக ஒரு பில்லியன் டொலர், அதாவது சுமார் 8,160 கோடி ரூபாய் சம்பாதித்த முதல் கால்பந்தாட்டாக்காரர் மற்றும் மூன்றாவது விளையாட்டு வீரர் ரொனால்டோதான். இதுபோக சமூக வலைத்தளங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக பில்லியன் கணக்கில் அள்ளுகிறார்.

கார்கள்: ரொனால்டோ ஒரு கார் பிரியர். உலகின் மிக விலை உயர்ந்த புகாட்டி, ரோல்ஸ் ராய்ஸ், மெக்லேரன் என அவரது கார்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆரம்ப நாட்கள்: தந்தை பணிபுரிந்து வந்து ஒரு கால்பந்து கிளப்பில் ரொனால்டோ விளையாடத் தொடங்கியபோது அவருடைய வயது 7. தன்னால் ஒரு தொழில்முறை கால்பந்தாட்டக்காரனாக முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது ரொனால்டோவின் வயது இதுதான்.  உடனே படிப்பை நிறுத்திவிட்டு கால்பந்து விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினார். குடும்பச்சூழல் காரணமாக மகனின் படிப்பை நிறுத்துவதற்கு அம்மாவும் ஒப்புதல் தந்துவிட்டார்.

இரவு பகல் பாராமல் கால்பந்தே கதியாகக் கிடந்தார். 15 வயதில் இதயநோய் தாக்கியது. இனிமேல் ரொனால்டோவால் கால்பந்து விளையாட முடியாது என்ற நிலை. இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் கழித்து கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.  புகழ்பெற்ற பல கிளப்களில் விளையாடி போர்த்துகல்லின் தேசிய அணியில் 18 வயதிலேயே இடம்பிடித்துவிட்டார்.  இதற்குப்பிறகு நிகழ்ந்தது எல்லாம் வரலாறு.

விமர்சனம்: சில ரசிகர்களும், சில விளையாட்டு விமர்சகர்களும் திமிர் பிடித்தவன், பொது வெளியில் அகங்காரத்துடன் நடந்துகொள்பவன் என்ற விமர்சனத்தை பரவலாக முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *