(நெவில் அன்தனி)
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (18) நடைபெற்ற 2ஆவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி 86 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 – 1 என இலங்கை ஏ அணி சமப்படுத்திக்கொண்டது.
லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களளைக் குவித்து இலங்கை ஏ அணியின் வெற்றிக்கு அடிகோலியிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியாவில் இந்த வருடப் பிற்பகுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்த வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் போன்ற ஒருவர் அணியில் இடம்பெறுவது அவசியம் என்ற அபிப்பிராயம் அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வந்தது.
இதனை அடுத்து அவரது ஆற்றலைப் பரீட்சிக்கும் வகையில் இலங்கை ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய ஏஞ்சலோ மெத்யூஸ் இன்றைய போட்டியில் அரைச் சதம் குவித்து தனது துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 4 பவுண்டறிகளுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பெற்றார்.
மெத்யூஸைப் போன்று துடுப்பாட்டத்தில் பரீட்சிக்கப்படும் அவிஷ்க பெர்னாண்டோ 2ஆவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
முன்னதாக ஆரம்ப வீரர் லசித் குரூஸ்புள்ளே 12 பவுண்டறிகளுடன் 73 ஓட்டங்களையும் நுவனிது பெர்னாண்டோ 5 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 108 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஏஞ்சலோ மெத்யூஸுடன் அணித் தலைவர் சதீர சமரவிக்ரம 4ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
சதீர சமரவிக்ரம 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் பின்வரிசையில் சுமிந்த லக்ஷான் 35 ஒட்டங்களைப் பெற்றார்.
லக்ஷானும் துனித் வெல்லாலகேயும் 7ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துனித் வெல்லாலகே 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சில் மேசன் க்ரேன் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேக்கப் பெதெல் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 39.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி 24ஆவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததால் அவ்வணி இலகுவாக வெற்றி இலக்கை அடைந்துவிடும் என கருதப்பட்டது.
ஆனால், கடைசி 70 பந்துகளில் 65 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் சரிய இலங்கைக்கு இலகுவாக வெற்றிகிட்டியது.
ஆரம்ப வீராங்கனைகள் ஜேக்கப் பெதெல் (16), ஜெக் ஹெய்ன்ஸ் (36) ஆகிய இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து டொம் ப்ரெஸ்ட், ஜேம்ஸ் ரியூ ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயன்றனர்.
ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.
டொம் ப்ரெஸ்ட் 6 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 67 ஓட்டங்களையும் ஜேம்ஸ் ரியூ 42 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ப்றைடன் கார்ஸ் 17 ஓட்டங்களையும் டொம் ஹார்ட்லி 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.