
(எம்.வை.எம்.சியாம்)
மேல் மாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (25) குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 222,000 ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டமை, கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள அரச பாடசாலையில் அத்துமீறி நுழைந்து 450,000 ரூபா பெறுமதியான 3 கணனிகளை திருடியமை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான வாகனமொன்றின் 50,000 ரூபா பெறுமதியான பேட்டரி திருடியமை போன்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 24, 32, 33, 42, 43 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய, சேருநுவர, நிகவெரட்டிய மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.