கொழும்பில் உணவகங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – உணவு வாங்குவோருக்கு எச்சரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் பூனைக்கழிவுகள் அடங்கிய மனித நுகர்விற்கு பொருந்தாத உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்த 30 கடைகளில் சோதனை மேற்கொண்ட நிலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, இராஜகிரியில் உள்ள பிரபல உணவு விற்பனை நிலையத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் எண் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 32 இன் கீழ் 2011ஆம் இலக்க உணவு பாதுகாப்பு உத்தரவுகளை மீறியமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 8 சந்தேக நபர்களும் கொழும்பு புதுக்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குற்றத்தின் தன்மைக்கேற்ப, 5000, 10000, 15000 ரூபாய் என 82500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகள் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

மேலும் சில கடைகளில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்க்கும் வகையில் உணவுகள் வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *