தன்னை பெரும் கோடீஸ்வரராக, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொண்டு, பலரிடம்மோசடி செய்த நைஜீரிய இன்ஸ்டாகிராம் பிரபலமான ஹஸ்பப்பி எனும் நபருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 11 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தனி ஜெட் விமானம், ஆடம்பர ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள், உல்லாச ஹோட்டல்களில் விடுதிகளில் விருந்து, விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் என தனது ஆடம்பர வாழ்க்கையை, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து பிரபலமானவர்  ஹஸ்பப்பி. நைஜிரியரான ஹஸ்பப்பி (Hushpuppi) ), மலேஷியா மற்றும் துபாயிலும் வசித்தார்.

அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்படும்வரை அவரை சுமார் 28 லட்சம் பேர் பின் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

பலநூறு மில்லியன் டொலர்களை  மோசடி செய்துள்ளார் என40 வயதான ஹஸ்பப்பி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இங்கிலாந்து ப்றீமியர் லீக் கால்பந்து கழகமொன்றிலிருந்து 124 மில்லியன் டொலர்களை திருடுவதற்கும் ஹஸ்பப்பி முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.

அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ரமோனி இகபாலோட் (Ramoni Igbalode Abbas). ரமோன் ஒலோரன்வா அப்பாஸ் எனவும் அறியப்பட்டவர். ஹஸ்பப்பி (ர்ரளரிரிpi)  எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமானார்.

சமூகவலைத்தளங்களில் தன்னை கோடீஸ்வரராகக் காட்டிக் கொள்ளும் ஹஸ்பப்பி,  தனக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

ஹஸ்பப்பி எனும் ரமொன் அப்பாஸை சிறு வயதிலிருந்து அறிந்தவர்கள், அவர் ஒரு காலத்தில் நைஜீரியாவின் லாகோஸ் நகர சந்தையில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளை விற்பனை செய்து வந்தவர் எனத் தெரிவித்திருந்தனர்.

 

அவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்த நிலையில், அதையே சாதகமாக்கிக் கொண்டு மோசடியில் ஹஸ்பப்பி ஈடுபட்டார் என குற்றம்சுமத்தப்பட்டது.

ஹஸ்பப்பி, இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா, நைஜிரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடுகளில் இருந்து ஏராளமான புகார்கள் கிடைத்தாக துபாய் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவின் எவ்.பி.ஐ., சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல், துபாய் பொலிஸ் ஆகியன 2000 ஆம் ஆண்டில் சுமார் இரண்டு மாதங்களாக ஹஸ்பப்பியை கண்காணித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து, ஹஸ்பப்பியை அவரது சமூகவலைத்தள செயல்பாடுகளை வைத்தே கண்காணித்து வந்த பொலிஸார், துபாயில் உள்ள ஒரு வீட்டில் அவர் தங்கி இருப்பதை அறிந்தனர்.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் அவ்வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஹஸ்பப்பியை பொலிஸார் கைது செய்தனர். ஹஸ்பப்பியுடன் அவரின் 12 சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.

ஹஸ்பப்பியிடமிருந்து பல சூட்கேஸ்களில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம், ஆடம்பர கார்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பணத்தின் பெறுமதி 350 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 8,125 கோடி இலங்கை ரூபா) என பொலிஸார் தெரிவித்தனர்.

20 இலட்சம் பேரின் மின்னஞ்சல் (ஈமெயில்) முகவரிகள் தொலைபேசிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துபாய் பொலிஸார் தெரிவித்தனர்.

துபாய் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரிகேடியர் ஜமால் அல் ஜலாப், இது தொடர்பாக கூறுகையில், ‘இச்சந்தேக நபர்கள், மக்களின் கடனட்டை விபரங்களைப் பெற்று அதன் பணத்தைத் திருடுவதற்காக பிரபலமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பெயரில் போலி இணையத்தளங்களைத் தொடங்கியிருந்தனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இம்முற்றுகையின் மூலம் 150 மில்லியன் திர்ஹாம் (40 மில்லியன் டொலர்) பணம், 25 மில்லியன் திர்ஹாம் (7 மில்லியன் டொலர்) பெறுமதியான 13 ஆடம்பர கார்கள்,  21 மடிக்கணினிகள், 47 ஸ்மார்ட் போன்கள், 15 பெண்ட்ரைவ்கள், 5 எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்குகள், 8 லட்சம் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

துபாயில் கைது செய்யப்பட்ட ஹஸ்பப்பி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அதையடுத்து அமெரிக்க நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.

பணச்சலவை குற்றச்சாட்டை கடந்த வருடம் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

அத்துடன், கத்தாரில் சிறுவர் பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நன்கொடை வழங்க விரும்பிய ஒருவரிடம் 11 லட்சம் டொலர்களை திருடியதாக ஹஸ்பப்பி எனும் அப்பாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீpதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மேலும் பலரிடம் 24 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார் என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஓடிஸ் டி ரைட்டுக்கு எழுதிய குறிப்பொன்றில் தனது குற்றங்களுக்காக மன்னிப்பு கோருவதாக ஹஸ்பப்பி குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் ஹஸ்பப்பி எனும் ரமோன் அப்பாஸுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹஸ்பப்பியின் மோசடிகளினால் பாதிக்கப்பட்ட இருவருக்கு 1இ732இ841 டொலர்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. (-சேது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *