‘பாகுபலி’ புகழ் நடிகை அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ எனும் திரைப்படம், எதிர்வரும் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’. இந்த திரைப்படத்தில் அனுஷ்காவுடன் ‘ஜதி ரத்னலு’ புகழ் நடிகர் நவீன் பொலி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களுடன் ஜெயசுதா, நாசர், முரளி சர்மா, துளசி, சோனியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார்.
பொருந்தா காமத்தை மையமாக வைத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீடு பற்றிய முக்கிய தகவலை படக் குழு அறிவித்திருக்கிறது.
அந்த வகையில் எதிர்வரும் கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.
நாற்பது வயது பேரிளம்பெண்ணுக்கும், இருபது வயது இளம் ஆண் ஒருவருக்கும் இடையே உண்டாகும் காதலைச் சொல்லியிருப்பதாலும், அனுஷ்கா மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.