
க்ரைமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கியேவ் உட்பட உக்ரைனின் ஏனைய நகரங்கள் மீது வான் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இன்று காலை ரஷ்யா தனது க்ரூஸ் ஏவுகணைகளைக் கொண்டு உக்ரேன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பலர் கொல்லப்பட்டதாகவும் பல உடமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ரைமியாவின் பாலம் மீதான தாக்குதல் உட்பட உக்ரேனிய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்தார்.
ரஷ்யப் படைகள் தாக்குதலின் ஆரம்பத்தில் தலைநகரைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகளை காட்டிலும் அதிக தீவிரத்துடன், கிவ் நகரின் மையத்தில் உள்ள பரபரப்பான சந்திகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களின் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளன.
மேற்கு உக்ரைனில் உள்ள விவ், டர்ன்பில் மற்றும் ஸிடோமிர், மத்திய உக்ரைனில் நிப்ரோ மற்றும் ரெமென்சக், தெற்கில் ஸபோஸாஸியா மற்றும் கிழக்கில் கார்கிவ் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
உக்ரேனிய அதிகாரிகளின் தகவல்களின் படி குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல பகுதிகள் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.