சஜித்துடன் கலந்துரையாடியுள்ள சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து  சர்வதேச நாணய நிதியக்குழுவினருக்கும் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் நேற்று செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் , அவற்றிலிருந்து மீள்வதற்கு தம்மால் முன்வைக்கப்படும் யோசனைகள் என்பன குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் நிதி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தூதுக்குழு கடந்த 24 ஆம் திகதி நாட்டுக்கு வியஜம் செய்தது.

இக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதியுடன் நாணய நிதியக் குழுவினர் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதன் போது நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பான தமது மதிப்பாய்வுகள் தொடர்பில் அக்குழுவினர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

குறித்த தூதுக்குழுவிற்கு பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டுவதை நோக்கி முன்னேறுவதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.