சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை ஆங்கில மொழியிலேயே எழுத வேண்டும் என சட்டக்கல்வி பேரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

தாய்மொழியில் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை எழுத அனுமதிக்குமாறு சட்டக்கல்வி மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே சட்டக்கல்வி பேரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் நீதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை நடத்தப்படும் என மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சட்டக்கல்வி பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் நாடே முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை நடத்தப்படும் என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையானது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

1956 ஆம் ஆண்டு எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கவே இலங்கையில் ஆங்கிலத்தை நீக்கி ஆட்சி மொழியை சிங்கள மொழியாக்கினார்.

தற்பொழுது ஆங்கில மொழியில் சட்டக்கல்விக்குரிய அனுமதி பரீட்சையை எழுதுமாறு கோருவதில் எவ்வித நியாமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சபையில் குறுக்கிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டத்தை கற்கும் மாணவர்களை சர்வதேசத்துடன் இணைக்க முயற்சிக்க வேண்டும்.

சர்வதேச சவால்களை சந்திக்கவுள்ள சட்டக்கல்வி மாணவர்களை தாய்மொழியில் மாத்திரம் கற்க செய்து அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம்.

சட்டக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களில் இரு தரப்பினரை உருவாக்க முயற்சிக்க வேண்டாம்.

ஆங்கிலப்புலமையுள்ள சட்டத்தரணிகள், சிங்களப்புலமையுள்ள சட்டத்தரணிகள் என இரு தரப்பினரை உருவாக்காதீர்கள்.

கிராமங்களிலிருந்து சட்டக்கல்விக்காக வருகை தரும் மாணவர்கள் ஆங்கில மொழியில் கற்று, கற்கையினை நிறைவு செய்து ஏனைய சட்டத்தரணிகளுக்கு இணையாக பணியாற்ற கூடியவர்களாக உருவாக்குவதே நோக்கமாகும்.

மருத்துவபீடம், பொறியியல் பீடம், தொழிநுட்ப பீடம், முகாமைத்துவ பீடம், ஆங்கிலத்தில் பாடநெறியை கொண்டு நடத்த முடியுமாயின் சட்டத்துறைக்கு மாத்திரம் ஆங்கிலத்திலிருந்து விதிவிலக்கு ஏன்?

தங்களது பிள்ளைகளை மாத்திரம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு எல் எல் பி கற்பதற்காக அனுப்புகிறீர்கள்.

ஆனால் நாட்டு மக்களின் பிள்ளைகளை தாய்மொழியில் மாத்திரம் கற்கச் செய்து நீங்களே அவர்களை முடக்கிவிடுகின்றீர்கள்.

இதேவேளை, மருத்துவ பீடத்திற்கு தெரிவாகும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஆங்கில மொழியிலேயே தங்களுடைய பட்டப்படிப்பினை நிறைவு செய்கின்றனர் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

1956 ஆம் ஆண்ட தவறிழைத்திருந்தால் அதனை திருத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி தவறினை அடியொற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கல்வி முறையில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையளிக்குமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச ஆங்கில கல்விக்கு முன்னுரிமை அளிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.

குறித்த சந்தரப்பத்தில் அவரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சிலரே அதற்கு எதிராக செயற்பட்டனர்.

எதிராக செயற்பட்டவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளிலேயே கற்கின்றனர்.

1956 ஆம் ஆண்டின் சாபமே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகும். சிங்களம் மாத்திரமே வேண்டும், சிங்களம் மாத்திரமே வேண்டும் என்றீர்கள். தற்போது அதன் விளைவுதான் நாடும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. கல்வியும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்ற தீர்மானத்தை சற்று ஒத்திவைத்து, கால அவகாசம் வழங்கி பின்னர் மாணவர்களை அதற்குள் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

அரசாங்கம் மேற்கொள்கின்ற தீர்மானங்களுக்கு உடனடியாக மாணவர்களை உள்ளீர்க்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நிலையில் சபையில் குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்தார்.

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மாத்திரமே ஆட்சி மற்றும் அரச மொழி என தெரிவித்தீர்கள்.

இன்று ஆங்கில மொழி மாத்திரம் என தெரிவிக்கின்றீர்கள்.

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாடு முன்னாள் அமைச்சராக செயலாற்றியமையினால் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன்.

தற்போது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரச மொழிகளாகும். ஆங்கிலம் மூன்றாவது மொழியாகவே காணப்படுகின்றது. ஆகையினால் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையினை தாய் மொழியில் எழுதுவதற்கு அனுமதியுங்கள் என்றார்.

எனினும் ஆங்கிலத்திலுள்ள வினாக்களை கற்றறிய புரிதல்கள் உள்ள போதிலும், விடையளிக்க போதியளவு ஆங்கில அறிவு இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சட்டக்கல்வி பேரவையுடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *