தமிழில் கதையின் நாயகனாக மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி இளம் நடிகை மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
‘டிக்கிலோனா’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதில் நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் ஜோன் விஜய், எம். எஸ். பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, ஜேக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் சத்தானத்திற்கு ஜோடியாக முன்னணி இளம் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வபிரசாத் தயாரிக்கிறார்.
ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்தில் தான் அறிமுகமாவேன் என அடம்பிடித்து, காத்திருந்து.. அவரது இயக்கத்தில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதன் பிறகு அவரது நடிப்பில் ‘ஒரு பக்க கதை’, ‘பேட்ட’, ‘பூமராங்’ என பல படங்கள் வெளியானாலும், எந்த திரைப்படமும் இவரை முன்னணி நட்சத்திர நடிகையாக அடையாளப்படுத்தவில்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான நான்கு படங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் திரையுலக வணிகர்களால் ‘ராசியில்லாத நடிகை’ என முத்திரை குத்தப்பட்டார். இதுபோன்று திறமையிருந்து அதிர்ஷ்டமில்லாத நடிகைகளை தேடி கண்டறிந்து, வாய்ப்பு கொடுக்கும் குணமுள்ள சந்தானம், அவர் கதையின் நாயகனாக நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி எனும் திரைப்படத்தில் தனது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இவருக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்துமா..! என்பதை காத்திருந்து தெரிந்து கொள்வோம்.