(என்.வீ.ஏ.)

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார். இதற்கு அமைய அவுஸ்திரேலியாவுக்கான அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு புதிய இருபது 20 அணித் தலைவர் வருட இறுதியில் நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த வருட பிற்பகுதியில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற ஆரோன் பின்ச், சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தனது சொந்த மண்ணில் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிககெட் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேற அவுஸ்திரேலியா தவறி இருந்தது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான தொடரின்போது உபாதைக்குள்ளான ஆரோன் பின்ச் கடைசிப் போட்டியில் விளையாடவில்லை. இதனை அடுத்து பிக் பாஷ் தொடரின் பின்னர் தனது இருபது 20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதாக 36 வயதான ஆரோன் பின்ச் அறிவித்திருந்தார்.

பிக் பாஷ் தொடரில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய ஆரோன் பின்ச் 38.90 என்ற சராசரியுடன் 428 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார்.

எனினும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில்லை என அவர் தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானம் காரணமாக அவரது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை சம்பியனாக்கிய முதலாவது அணித் தலைவர் ஆரோன் பின்ச் ஆவார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2021இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை பின்ச் தலைமையிலேயே அவுஸ்திரேலியா வெற்றிகொண்டு சம்பியனாகியிருந்தது.

103 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 3120 ஓட்டங்களைக் குவித்துள்ள பின்ச், அவுஸ்திரேலியா சார்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட்  போட்டிகளில்  அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராவார்.

5 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி இருந்த அவர், 146 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 சதங்கள், 30 அரைச் சதங்களுடன் 5,406 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *