சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை – சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.

வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதிப்பை அரசாங்கத்தின் கூட்டணியின் உறுப்பினர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து இறுதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.

2022.04.12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

வங்குரோத்து நிலை என அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.

சீனா,இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தின மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு கிடைக்கப் பெறவிருந்த அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.

வங்குரோத்து அடைந்து விட்டோம் என அறிவித்ததை தொடர்ந்து உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நிதியுதவி மற்றும் அபிவிருத்தி சார் திட்டங்களில் மட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆகவே உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *