சர்வதேச நாணய நிதியம், பங்களாதேஷுடன் 4.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
இது 42 மாத காலத்திற்கு கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட கடன் வசதி (ECF) மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆகியவற்றின் கீழ் சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களும், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் (RSF) கீழ் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த வருடத்திற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய 3 ஆவது தெற்காசிய நாடாக பங்களாதேஷ் உள்ளது.
முன்னதாக, இலங்கையும் பாகிஸ்தானும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி வசதிகளைப் பெறுவதற்கு இதேபோன்ற ஊழியர் மட்ட ஒப்பந்தங்களை எட்டியுள்ளன.
உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தனது பொருளாதாரத்தையும் ஓரளவு பாதித்துள்ளதாக பங்களாதேஷ் நிதியமைச்சர் முஸ்தபா கமால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார ஸ்திரமின்மை நெருக்கடியாக உருவாவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியை கோரியுள்ளதாக அவர் குறித்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.