சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றசாட்டுக்கள் அடிப்படையற்றவை – நிதி இராஜாங்க அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றிப்பெற்றதையிட்டு எதிர்தரப்பினர் கலக்கமடைந்துள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தை முன்னிலைப்படுத்தி எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் எதிர்தரப்பினரது நிலை கண்டு கவலையடைகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்.எஸ்.எம்.மரிக்கார் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் குறிப்பிட்ட விடயங்களுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்;

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்களினால் தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பிரச்சினைகள் தீர்வடைந்து செல்வதை கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள்.

தமக்கு அரசியல் செய்வதற்கு காரணிகள் இல்லை என்பதால் பொய்யான  விடயங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் முன்வைத்துள்ள கருத்துக்கள் அடிப்படையற்றவை.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்   எடுக்கப்பட்டது ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான முழு விபரங்கள் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாத காலத்திற்குள் கிடைக்கப்பெறும். நாணய நிதியத்தின் ஒததுழைப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்ள அரசாங்கம் விசேட திட்டங்களை வகுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியல் செய்வதற்கு தொனிப்பொருள் ஒன்று இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை  விவகாரத்தை தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்தி பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்திக் கொள்கிறார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களையிட்டு கவலையடைகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *