(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் பெங்களுருவில் வியாழக்கிழமை (23) இடம்பெறவுள்ள ஜி-20 மாநாட்டின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமாக சிறிகொத்தாவில் புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இந்தியாவின் பெங்களுருவில் நாளை நிதி அமைச்சர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாத்திரமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றவுள்ளனர். கடன் மறுசீரமைப்பிற்காக நிதி உத்தரவாதத்தை வழங்குவதாக இந்தியா, ஜப்பான் மற்றும் பரிஸ் கிளப் நாடுகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும் சீனாவிடமிருந்து இதுவரையில் இது தொடர்பில் ஸ்திரமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. எவ்வாறிருப்பினும் ஜி-20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதோடு , சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
நாட்டில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழல் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவ்வாறிருந்தும் தேர்தலை நடத்துமாறு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஆர்ப்பாட்டத்தினை நடத்துபவர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே இந்த நெருக்கடி நிலைமையில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது பொறுத்தமற்றதாகும் என்றார்.