எம்.மனோசித்ரா)
கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர நீக்கப்பட்டு , அந்த பதவிக்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
மத்திய குழு கூட்டம் நிறைவடைந்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை , அவர்களின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த மஹிந்த அமரவீரவை நீக்கி , அந்த பதவிக்கு திலங்க சுமதிபாலவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதே போன்று பொது ஜன எக்ஷத் பெரமுனவின் செயலாளராக ஷான் விஜேலால் நியமிக்கப்பட்டுள்ளார். சிஷே்ட உறுப்பினர்களானாலும், கனிஷ்ட உறுப்பினர்களானாலும் எந்த தவறை இழைத்தாலும் அது தவறாகவே கருதப்படும். கட்சியில் எவ்வித பிளவுகளும் இல்லை. சிலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகச் சென்று அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ளனர் என்றார்.
இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில், ‘என்னை பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. நாம் அது தொடர்பில் கவனத்தில் கொள்வதும் இல்லை. பெயர்பலகைக்கும் , கட்டத்திற்குள்ளும் கட்சியை வரையறுக்க முயற்சித்தால் அது பிரயோசனமற்றதாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கை தொழிலாளர் காங்ரஸ், அத்தாவுல்லாவினுடைய கட்சி மற்றும் டக்ளஸ் தேவானந்தாவினுடைய கட்சி என பலர் உள்ளனர். கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் யாருக்கும் அறிவிக்காமலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.