ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவில் நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – எஸ்.எம்.சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் ஆட்சிமாற்றம் ஏற்படாது. ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும்.

ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவாக நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சவால்களை வெற்றிக்கொள்ள கூடியவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டாலும் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்றமை வரவேற்கத்தக்கது.

நாட்டு மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க தயார் என தற்போது பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பது உண்மையான தலைமைத்துவம்,ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 10 வருடங்களேனும் செல்லும் என பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கடந்த காலங்களில் ஊடக சந்திப்புக்களை நடத்தினார்கள்.

நிறைவடைந்த 07 மாத காலத்திற்குள ஜனாதிபதி நாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சகல  தீர்மானங்களுக்கும் அரசியல் நோக்கமற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது,ஆகவே தவறை திருத்திக் கொள்வோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.தற்போதைய நிலையில் நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை,அரசியல்வாதிகளே தேர்தல் வேண்டும் என பிரசாரங்களை நடத்திக் கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 8000 உறுப்பினர்களை தெரிவு செய்வதால் ஆட்சிமாற்றம் ஏதும் ஏற்படாது.

ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.வெகுவிரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவரையும்,சவால்களை வெற்றிக்கொள்ள கூடியவரையும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *