(எம்.மனோசித்ரா)
மக்களின் வழமையான இடையூறற்ற வாழ்வுக்கான 3 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், வைத்தியசாலை சேவைகள் ஆகிய மூன்றுமே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் வைத்திய சேவைக்குள் தாதி சேவை(நேர்சிங் ஹோம்), மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சையளித்தல் அடங்கலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்தத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை அரச நிர்வாக சேவைகள் பாரிய ஆர்ப்பாட்டத்தினையும், பணிப் பகிஷ்கரிப்பினையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இவ்வாறான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.