(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தீர்வுப்பொது ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவரின் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

அந்த தீர்வுப்பில் பிராந்தியங்களின் ஒன்றிணைப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தற்போது வேறுமாதிரி குறிப்பிடப்படுகின்றது. அது பிரச்சினை அல்ல.

ஆனால் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதுதான் முக்கியமானது.

அதனால் ஜனாதிபதி அதிகார பரவலாக்கம் தொடர்பாக சபையில் கருத்துக்களை கேட்டார். அதற்கு இணக்கமா என கேட்டார். ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதனால் இந்த விடயத்தில் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் அதிகார பரவலாக்கல்தான் இங்கே முக்கிய விடயமாக அமையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலுமொரு ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைக்க இருப்பதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தோம்.

ஆனால் தாக்குதல் காலப்பகுதியில் உதிர்த்த நாமல் குமார போன்ற இளைஞர்கள் தற்போது எங்கே என தெரியாது. அதேபோன்று திகன ககலவரத்துக்கு காரணமாக இருந்த அமித் வீரசிங்க, இவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

எனவே ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவில் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *