ஜாவா லேன் – நிகம்போ யூத் ; சோண்டர்ஸ் – மாத்தறை சிட்டி : விறுவிறுப்பான போட்டிகள் இன்று

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியின் 9ஆம் கட்டத்தில் இரண்டு முக்கியமான போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் நடைபெறவுள்ளன.

14 கழகங்கள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் தோல்வி அடையாமல் 22 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் ஜாவா லேன் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்த கால பெறுபேறுகளின் அடிப்படையில் நிகம்போ யூத் கழகம் முன்னிலையில் இருக்கின்றபோதிலும் அண்மைக்காலத்தில் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள ஜாவா லேன் கழகத்துக்கு இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும் நடப்பு சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடி வரும் நிகம்போ யூத் கழகம் இன்றைய போட்டியில் ஜாவா லேன் கழகத்துக்கு சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் போட்டியைத் தொடர்ந்து இதே மைதானத்தில் சோண்டர்ஸ் கழகமும் மற்றொரு தோல்வி அடையாத அணியான மாத்தறை சிட்டி கழகமும் மோதவுள்ளன.

இப் போட்டி சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறுவதால் சோண்டர்ஸ் கழகத்துக்கு அனுகூலமான முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாத்தறை சிட்டி கழகம் இப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்கமுடியாது.

எனவே சுகததாச அரங்கில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அத்துடன் சில வருடங்களின் பின்னர் இன்றைய தினம் பெருந்திரளான இரசிகர்கள் இப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தருவர் என கருதப்படுகிறது.

இதேவேளை மேலும் இரண்டு போட்டிகள் கொழும்புக்கு வெளியில் நடைபெறவுள்ளன.

செரெண்டிப் கழகத்துக்கும் இ.போ.ச. கழகத்துக்கும் இடையிலான போட்டி கண்டியிலும் யாழ். சென். மேரிஸ் கழகத்துக்கும் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி குருநாகலிலும் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *