இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜலன் நுசா துவாவில் ‘ஜி-20’ அமைப்பின் 2 நாட்களுக்கான உச்சி மாநாடு இன்று (15) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த மாநாட்டில் அர்ஜெண்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
இதில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியா சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு பாலி விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 ஆம் திகதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க உள்ளதால், மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேஷிய ஜனாதிபதியிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமை பொறுப்பை பெற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில் ‘ஜி-20’ அமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லையெனவும், அவருக்கு பதில் ரஷ்யாவின் சார்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநாட்டில் பங்கேற்பதற்காக செர்ஜி லாவ்ரோவ் நேற்று இந்தோனேசியாவில் மாநாடு நடைபெறும் ஜலன் நுசா துவா நகருக்கு சென்றபோது அவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து வைத்தியர்கள் நலமாக இருப்பதை உறுதி செய்தனர். அதைதொடர்ந்து அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.