டுவிட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு அந்நிறுவனத்தின் புதிய அதிபர் இலோன் மஸ்க் முன்வைத்துள்ள திட்டத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதல்நிலை கோடீஸ்வரரான இலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை, கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பூர்த்தி செய்தார்.
அதன்பின் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால் உட்பட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கியதுடன் பணிப்பாளர் சபையையும் இலோன் மஸ்க் கலைத்தார்.
டுவிட்டரின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றுள்ள இலோன் மஸ்க், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,000 ஊழியர்களில் சுமார் 3,700 பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊழியர்கள் பணியிலிலிருந்து நீக்கப்படுவார்களா என்பது குறித்து, கலிபோர்னியா மாநில நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை (04) மின்னஞ்சல் ஊடாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தீர்மானத்துக்கு எதிராக கலிபோர்னியாவிலுள்ள சமஷ்டி நீதிமன்றமொன்றில் ஊழியர்கள் பலரினால் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (03) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தின் தீர்மானமானது, அமெரிக்க சமஷ்டி அரசாங்க சட்டம் மற்றும் கலிபோர்னியா மாநில சட்டங்களை மீறுவதாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 60 நாட்கள் முன்னறிவிப்பு இன்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்தின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை இலோன் மஸ்க் பின்பற்றுவதற்கும், வழக்குத் தொடுக்கும் உரிமையை கைவிடச் செய்யும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு ஊழியர்களை வற்புறுத்துவதிலிருந்து நிறுவனத்தை கட்டுப்படுத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.