தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் : இந்திய புலனாய்வு பிரிவு தகவல்

இலங்கை மீன்பிடி படகு ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஏராளமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய புலனாய்வு பிரிவு மீண்டும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதி திரட்டலுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தாம் சந்தேகிப்பதாகவும் என்.ஐ.ஏ என்ற இந்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று இந்திய கடலோர படையினர் லட்சத்தீவின் மினிகாய் தீவுக்கு அருகில் ‘ரவிஹன்சி’ என்ற படகை தடுத்து நிறுத்தினர். முறையான ஆவணங்கள் எதுவும் அதில் இருக்கவில்லைஇதன்போது அதில் இருந்த ஆறு இலங்கை பிரஜைகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் கொச்சி துணை மண்டலத்தால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், கேரள மேல் நீதிமன்றத்தில் இந்திய புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர்கள், இரகசியக் கூட்டங்களை நடத்தி போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதி செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக வழிகளில் பணம் சேகரித்தல்
அதே நேரம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால், அவர்கள் ஒரு பயங்கரவாத குழுவை உருவாக்கி போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்காக சட்டவிரோதமாக வழிகளில் பணத்தை சேகரித்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து ரமேஷின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் அவருக்குத் தீராத தொடர்பை காட்டுவது மாத்திரமன்றி அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *