
(நெவில் அன்தனி)
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (16) ஆரம்பமான றோயல் – தோமியன் 114ஆவது நீலவர்ணங்களின் சமரில் அணித் தலைவர் தாசிஸ் மஞ்சநாயக்கவும் ரமிரு பெரேராவும் குவித்த அபார சதங்களும் அவர்கள் நிலைநாட்டிய சாதனைமிகு 5ஆம் விக்கெட் இணைப்பாட்டமும் றோயல் அணியை பலமான நிலையில் இட்டன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் அடைந்த போதிலும் பின்னர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முடிவுக்கு வந்தபோது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களைக் குவித்தது.
பெரும்பாலும் இந்த மொத்த எண்ணிக்கையுடன் தனது முதலாவது இன்னிங்ஸை றோயல் அணி டிக்ளயார் செய்து சென் தோமஸ் அணிக்கு 2ஆம் நாளன்று முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளில் சென் தோமஸ் பலம்வாய்ந்த அணியாக பரவலாக கருதப்பட்டபோதிலும் அவ்வணியை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் றோயல் அணி விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக தாசிஸ் மஞ்சநாயக்கவும் ரமிரு பெரேராவும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி றோயல் அணியினரை பரவசத்தில் ஆழ்த்தியதுடன் சென் தோமஸ் அயினரை பிரமிக்க வைத்தனர்.
றோயால் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 19 ஓட்டங்களையும் மற்றொரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களையும் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
இதன் காரணமாக றோயல் அணி கணிசமான ஓட்டங்களைப் பெறாது என சென் தோமஸ் அணியினரும் ஆதரவாளர்களும் எண்ணியிருக்கக்கூடும்.
ரெஹான் பீரிஸ் (4), சினேத் ஜயவர்தன (1), உவிந்து வீரசேகர (3) ஆகிய முன்வரிசை வீரர்கள் மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமையே சென் தோமஸ் அணியினரின் இந்த எண்ணத்திற்கு காரணம் எனக் கூறலாம்.
அதனைத் தொடர்ந்து ஒவின அம்பன்பொலவுடன் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் தாசிஸ் மஞ்சநாயக்க 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தினார்.
ஒவின அம்பன்பொல திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். (63 – 4 விக்.)
அதன் பின்னர் மஞ்சநாயக்கவும் ரமிருவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 229 ஓட்டங்களைப் பகிர்ந்து றோயல் அணியைப் பலமான நிலையில் இட்டனர்.
அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சென் தோமஸ் அணியினர் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினர்.
இறுதியில் மஞ்சநாயக்கவை ஆட்டம் இழக்கச் செய்த கவிந்து டயஸ், இணைப்பாட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்து சென் தோமஸ் அணிக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தார்.
மிகத் திறமையாக, நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய மஞ்சநாயக்க சரியாக 5 மணித்தியாலங்கள் களத்தில் நிலைத்திருந்து 150 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகளுடன் 137 ஓட்டங்களைக் குவித்தார்.
அணித் தலைவருக்கு பக்கபலமாக 4 மணித்தியாலங்கள், 21 நிமிடங்கள் மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடிய ரமிரு பெரேரா 186 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 128 ஓட்டங்களைப் பெற்றார்.
சென் தோமஸ் பந்துவீச்சில் ஆகாஷ் பெர்னாண்டோ 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கவிந்து டயஸ் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.