தான் கடத்தப்பட்டுள்ளதாக கூறி தனது கணவன், பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெற முயன்ற பெண் கைது

தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெறுவதற்காக வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த பெண் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனமடுவ நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி எனவும் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து தற்போது ஒப்பந்தங்களில் நஷ்டமடைந்து வீட்டில் தங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் கடந்த 15 ஆம் திகதி ஆனமடுவ வீட்டிலிருந்து தனது மகள் வசிக்கும் வாரியப்பொல ஹன்ஹமுன நவகத்தம பிரதேசத்துக்குச் சென்றதாகவும், அன்றைய தினம் தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஆனமடுவ நகருக்கு வருவதாக கூறிவிட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஆனமடுவ நகருக்கு தனது தாயாரை எதிர்பார்த்து காத்திருந்த பெண்ணின் இளைய மகன், தனது தாயை காணாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி குறித்த பெண் தனது கணவருடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்,  நான்கு பேர் கொண்ட குழு தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணையை  ஆரம்பித்த நிலையில், பெண் கடத்தப்பட்டதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் தொலைபேசி அழைப்புகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, குறித்த பெண் தங்கியிருந்த கட்டுபொத்த பகுதியில் விசேட விசாரணைகளை ஆரம்பித்து, பின்னர் வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் இன்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *