திரிபோஷவில் புற்றுநோய் காரணி உள்ளமை பொய்யானது அல்ல – சுகாதார அமைச்சின் அதிகாரி

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மைக்காலமாக, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் உண்டாக்கும் அஃப்லடொக்சின்கள் இருப்பதாக எமது செய்தி வெளியிட்டபோது, ​​அதைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.

எவ்வாறாயினும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, திரிபோஷ தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையுடன் அஃப்லடோக்சின் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஊடகங்கள் மூலம் உண்மைகள் பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் திலக் சிறிவர்தன வெளியிட்ட தகவல் தொடர்பில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் எமது செய்திப் பிரிவு வினவியதுடன், அது பொய்யானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தை அண்டிய பகுதிகளில் இந்த புற்றுநோய் காரணிகள் அடங்கிய திரிபோஷ மீட்கப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *