துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் தாக்கியது. ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
Pic/FP
இந்த பூகம்பம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த பூகம்ப பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.
பூகம்பம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் , தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்தை கடந்துள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.