
(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்களாக சரத்வீரசேகர, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, அஜித் மான்னப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கமைய 17 பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் 08 குழுக்களுக்கான உறுப்பினர் நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தின் போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரம் முன்மொழிந்ததுடன்,பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதனை வழிமொழிந்ததை தொடர்ந்து மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் தலைவராக உபுல் மஹேந்திர நியமிக்கப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ முன்மொழிந்ததுடன்,அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமித உடுகும்புற வழிமொழிந்ததை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்கு குழு தலைவராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சுற்றாடல் ,இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி’ பற்றிய துறைசார் மேற்பார்வைக்கு குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டதுடன்,அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க முன்மொழிந்ததுடன்,அதனை பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வழிமொழிந்தார்.
இந்த நியமனங்களை தொடர்ந்து,குழு உறுப்பினர்களுக்கு பிரேரணைகளை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன்,இதன்போது இந்தக் குழுக்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்பக் கலந்துரையாடல் இடம்பெற்றது.