தேசிய வைத்தியசாலையில் ஔடத களஞ்சியத்தில் மருந்துகள் இல்லை

இலங்கையர்கள் பெரும்பாலான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான அணுகலை இழந்துள்ளனர்.

இது அவர்களை மனிதாபிமான பேரழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக டிரெக்ட் ரிலீப் என்ற நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துவிட்டதால், தேசியமயமாக்கப்பட்ட சுகாதார அமைப்பு மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை போதுமான அளவில் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை தனது 85 சதவீத மருந்துத் தேவைகளில் 80 வீதத்தை இறக்குமதி செய்து வருகிறது.

நாடு 2021 ஆம் ஆண்டில் 815 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இறக்குமதி செய்தது.

எனினும் கடந்த மே மாதத்தில் எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கையிடம் 25 மில்லியன் டொலர்கள் மாத்திரமே வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இருந்தது.

இந்தநிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு, அவர்கள் பேரழிவுகரமான எண்ணிக்கையிலான இறப்புகளை எதிர்பார்ப்பதாக, டிரெக்ட் ரிலீப் அமைப்பின் இலங்கைக்கான மேலாளர் கிறிஸ் அல்லேவே கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள 3,500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய மருத்துவமனை, வழக்கமாக 1,300 மருந்துகளை கையிருப்பில் கொண்டிருக்கும்.

எனினும் இப்போது அங்கு 60 அத்தியாவசிய மருந்துகளே கையிருப்பில் இருப்பதாக அல்லேவே குறிப்பிட்டுள்ளார்.

மயக்க மருந்து பற்றாக்குறையால், நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உட்பட பெரும்பாலான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

புற்றுநோயாளிகள் கொடிய நோயை எதிர்த்துப் போராடத் தேவையான மருந்துகளை இழந்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள், இரத்த சர்க்கரை பரிசோதனைக்காக தங்கள் சொந்த குளுக்கோஸ் மீட்டர்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *