
(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி சகல பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன. அத்தோடு செவ்வாய்கிழமை (07) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை தாம் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அக்கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி சார்பில் விஜித ஹேரத் , சுதந்திர மக்கள் கூட்டணி சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் , அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் , எம்.ஏ.சுமந்திரன் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
சட்ட ரீதியில் தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனவே மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டியது ஆணைக்குழுவின் கட்டாயக் கடமையாகும்.
திறைசேரி செயலாளருடன் எதற்காக இது தொடர்பில் நீங்கள் கலந்துரையாட எதிர்பார்க்கின்றீர்கள் என்பதற்கான காரணம் எமக்குத் தெரியவில்லை. மார்ச் 20க்கு முன்னர் தேர்தலை நடத்தக் கூடிய திகதியை தாமதமின்றி அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு செவ்வாய்கிழமை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட விரும்புகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.