(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் சனிக்கிழமை (25) தொழிற்சங்கங்களுக்கும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

எனவே தமக்கான வரி சலுகைகளை வழங்கக் கோரி எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ள மிகவும் தீர்க்கமான வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நாளை திங்கட்கிழமை இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , திறைசேரி செயலாளர் , ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரும் , தொழிற்சங்க தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்க கேசரிக்கு தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இதற்காக சகல துறையினரும் வரி செலுத்த வேண்டும். ஆனால் அந்த வரி நியாயமானதாக இருக்க வேண்டும். இது தொடர்பான எமது முன்மொழிவுகளையும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம்.

இதன் போது , ‘நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியது அத்தியாவசியமானது. எனவே அவர்களது சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.’ என திறைசேரி செயலாளர் , ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரால் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கூறுவதைப் போன்று வரி வசூலிப்பானது அசாதாரணமாகக் காணப்பட்டால் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டோம். எந்த வகையிலும் அவர்கள் கூறும் நிபந்தனைகளை நூற்றுக்கு நூறு வீதம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனினும் இது தொடர்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் மூலம் தீர்வினை வழங்க தாம் தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். நாம் கலந்துரையாடல்களுக்கு தயாராக உள்ள போதிலும் , கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு இதுவரை எவ்வித உடனடி சலுகைகளும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் தொழில் வல்லுனர்கள் சங்கம் என்பன தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. இனிவரும் போராட்டங்கள் கடந்த காலங்களைப் போன்றல்லாது , தீவிரமடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மான உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை 40 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கும். அதற்கமைய எமது போராட்டம் எவ்வாறு அமையும் என்பது அறிவிக்கப்படும்.

எனினும் ஆரம்பத்திலேயே சுகாதார சேவைகளை முடங்கச் செய்தால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் , முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *