(இராஜதுரை ஹஷான்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்களுக்கு அமைய செயற்பாட்டால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
தொழிற்சங்க போராட்டம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சமூக நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றால் அரச கட்டமைப்பில் முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும். தேர்தலில் ஒருவேளை மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் உள்ளூர் அதிகார சபை நிர்வாகத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் தான் தோற்றம் பெறும்.
தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது அவசியமற்றது. நாடு என்ற ரீதியில் தற்போது தேர்தலுக்கு தயார் இல்லை, நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். அரசியல் கட்சிகள் ஏதும் மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். புதிய வருமான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுயநல நோக்கத்துடன் இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்களுக்கு அமைய செயற்பட்டால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
தொழிங்சங்க போராட்டம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சட்டவொழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என்றார்.