தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்த வேண்டும் – வடிவேல் சுரேஷ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன, யார் ஆட்சி செய்தாலும்  எமது மலையக மக்களின் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை.

200 வருடங்களாக அந்த மக்கள் இக்கட்டான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொருட்களின் விலையேற்றம், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர்கள் சிக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு அமைச்சரவையோ பாராளுமன்றமோ தீர்வை வைத்துள்ளதா?

அவர்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? நாட்டில் கூடுதலாக வேலை செய்து குறைவாக சம்பளம் பெரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை எப்போது அதிகரிக்கப் போகின்றீர்கள். இவர்களுக்காக பாராளுமன்றத்தில் எந்தப் போராட்டத்தை நடத்துவதற்கும் எங்களை அர்ப்பணிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கைச்செலவு  3250 ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வெள்ளிக்கிழமைக்குள்  தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஒரு நாளுக்குரிய சம்பளத்தை 3250 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.

கம்பனிகளுக்கு வக்களாத்து வாங்குவதை நிறுத்திவிட்டு சம்பள நிர்ணய சபையின் ஊடாக சரி அதனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாடுதளுவிய ரீதியில் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம்.

அத்துடன் இந்த நாட்டின் தலைமையை தீர்மானிப்பதிலும் சரி, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாக இருந்தாலும் அந்த சக்தி இந்த நாட்டில் இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இருக்கிறது என்பதை பாராளுமன்றமும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனால்தான் பல தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். ஆனால் அந்த பதவிக்கு வந்தபிறகு அவர்கள் அதனை மறந்துவிடுகிறார்கள். அவர்களை மறந்து செயற்படுவதுதான் எமக்கு வேதனையாக இருக்கிறது.

எனவே எம்மை கறிவேப்பிலை போல் பயன்படுத்துவதை தலைவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *