நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

மாகாண சபை ஒரு வெள்ளை யானையை போன்றது. இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இராணுவத்தினரது தியாகத்தினால் நாடு இன்று அமைதியாக உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இராணுவத்திற்கு ஒதுக்கும் நிதி அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான முதலீடு என கருத வேண்டும்.

நாட்டில் 30 வருட பயங்கரவாத யுத்தம் காணப்பட்டது. இராணுவம், பாதுகாப்பு தரப்பினரால் நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக தமது அன்றாட பணிகளில் ஈடுப்படுகிறார்கள்.

இருப்பினும் இராணுவத்திற்கு எதிராக போர்க் குற்றம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ளது, ஆகவே நாட்டு மக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அக்காலப்பகுதியில் பெற்றோர் ஒன்றாக வெளியில் செல்வது இல்லை, இருவரும் ஒன்றாக இறந்தால் தமது பிள்ளைகள் அநாதைகளாகுவார்கள் என கருதுகிறார்கள்.

இந்த நிலையை இராணுவத்தினர் மாற்றியமைத்தார்கள். 29 ஆயிரம் இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்கள், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கவீனமடைந்துள்ளார்கள்.

மிகுதியானவர்களை போர் குற்றவாளிகளாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருசில இராணுவ அதிகாரிகளுக்கு சில நாடுகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்கள் ஊடாக இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்டி இராணுவத்தினரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

தமக்காக உயிர் தியாகம் செய்ய இராணுவத்தை தண்டிக்க முயற்சிக்கும் செயற்பாட்டை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டால்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்,போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.

இராணுவத்தினரின் செயற்பாடு, இராணுவத்தினரது எண்ணிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஒருதலை பட்சமானதாக காணப்படுகிறது.

மனித உரிமைகள் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்,ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும்,நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை,அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள், தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார். ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *