(எம்.மனோசித்ரா)

தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைப்பற்கு மக்கள் தயாராகி விட்டனர். இதனைப் பொறுக்க முடியாத ஆளுங்கட்சியும் , ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்தி தொழிற்சங்கங்கள் ஊடாக நிறுவனங்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எனவே தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையெனில் அவற்றை பகிரங்கமாக ஆதரங்களுடன் நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , மக்கள் மத்தியில் அது தொடர்பான நிச்சயமற்ற நிலைமையே காணப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிவிப்பையும் மீறி தேர்தலை மேலும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தின் ஊடாகவும் முயற்சிக்கப்படுகின்றமையின் காரணமாகவே மக்கள் மத்தியில் இவ்வாறு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் மீதுள்ள அச்சத்தினால் சில எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி மீது சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தொழிற்சங்கங்களை அமைத்து அவற்றின் ஊடாக பல்வேறு நிறுவனங்களிடம் கப்பம் கோருவதாக தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அத்தோடு இதுவரையில் தேர்தல் பிரசார கூட்டங்களுக்காக 3 பில்லியன் செலவிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையெனில் அதனை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைப்பற்கு மக்கள் தயாராகியுள்ளமையின் காரணமாகவே எம்மீது இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் எமது ஆட்சியில் நாம் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கப் போவதில்லை. இன்று பல்வேறு வழிகளிலும் கப்பமும் , இலஞ்சமும் பெற்றுக் கொண்டிருக்கும் சகலரும் சிறையிலடைக்கப்படுவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *