
(எம்.மனோசித்ரா)
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு கோரி , நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட 7 சிவில் அமைப்புக்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளன.
அரசியலமைப்பிற்கமைய அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான அதிகாரம் காணப்படும் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுக்காமலிருப்பதானது, பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.
இவ்வாறான நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களையும் கேள்விக்குறியாக்குவதாகவும் அந்த அமைப்புக்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.
பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம், ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் மதிப்பீட்டு நிறுவனம், ட்ரான்ஸ்பெரன்ஸி இரன்டர் நெஷனல், கபே அமைப்பு, தாய் நாட்டின் தாய்மார் மற்றும் மகளிர் அமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் என்பவற்றினால் இவ்வாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.