(இராஜதுரை ஹஷான்)

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

ஆளும் தரப்பின் எதிர்ப்பினால் திறைச்சேரியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு அழைக்கும் யோசனை இரத்து செய்யப்பட்டது பாராளுமன்ற உறுப்பினர் என பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு. ஆகவே பாராளுமன்றம் தலையிட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகருக்கு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க பாராளுமன்றத்திற்கு பொறுப்பு உள்ள நிலையில்,அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டும் நிலைக்கு பாராளுமன்றம் தள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில் நிறைவேற்றுத்துறை அதிகாரம் தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையாக செயற்படுகிறது.தேர்தலுக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தேர்தல் என்பதொன்று கிடையாது என ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்து முற்றிலும் தவறானது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் செலவுகளுக்கு தேவையான நிதியை விடுவிக்க திறைச்சேரி மறுப்பு தெரிவித்துள்ளதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பணிகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு,ஆனால் அதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இடமளிக்கவில்லை. தேர்தலுக்கு தயார் என பொது மக்கள் மத்தியில் குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் மறைமுகமாக தேர்தலுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார்.இந்த பிரேரணை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படும்.

நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் நிதியமைச்சு நிச்சயம் நிதி விடுவிக்க வேண்டும். எத்தனை பேர் நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக உள்ளார்கள். எத்தனை பேர் எதிராக உள்ளார்கள் என்பதை இந்த பிரேரணை ஊடாக மக்கள் அறிந்துக் கொள்ளலாம் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *