(எம்.எம்.சில்வெஸ்டர்)
நியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் விபரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டது.
திமுத் கருணாரட்ண தலையைிலான இலங்கை கிரிக்கெட் குழாமில் அனுபவ வீரர்களான எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளதுடன் அண்மைக் காலங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த ஓஷத பெர்னாண்டோவும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முதற்தர போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க, வேகப்பந்துவீச்சாளரான மிலான் ரத்நாயக்க ஆகிய இருவரும் இந்த குழாமில் இடம்பெறும் புதுமுக வீரர்களாவர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதியன்று நியூஸிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றும் பட்சத்தில் ஐ.சி.சி.யின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது.
நியூலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தன்மைமிக்கது என்றபடியால், வேகப்பந்துவீச்சாளர்கள் 7 பேர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
திமுத் கருணாரட்ண (அணித்தலைவர்), தனஞ்சய டி சில்வா, எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, பிரபாத் ஜயசூரிய, சாமிக்க கருணாரட்ண, கசுன் ரஜித்த, லஹிரு பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ,மிலான் ரத்நாயக்க.