நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று ஆரம்பப் போட்டியில் அபார வெற்றியை ஈட்டிய நியூஸிலாந்து மற்றொரு வெற்றியை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தானை இன்று எதிர்த்தாடவுள்ளது.
இங்கிலாந்து – அயர்லாந்து போட்டியைத் தொடர்ந்து மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆனால், மெல்பர்னில் மழை பெய்வதால் ஆட்டம் பிற்போடப்படலாம். மேலும் ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றால் போட்டிகளுக்கு இடையில் 30 நிமிட இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும் என்பது ஐசிசியின் விதிகளாகும்.
நியூஸிலாந்து அணி தனது ஆரம்பப் போட்டியில் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய அபார ஆற்றல்களை நோக்குகையில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனினும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழல்பந்துவீச்சாளர்கள் நியஸிலாந்து அணிக்கு சவால் விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சுழல்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வந்துள்ளதை கடந்த காலங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் கேஷவ் மகாராஜ், தப்ரெய்ஸ் ஷம்சி ஆகியோரின் சுழல்பந்துவீச்சில் நியூஸிலாந்து 98 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.
எனவே, ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் மொஹம்மத் நபி, ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரின் சுழல்பந்துவீச்சுகளை நியூஸிலாந்து துடுப்பாட்டக்காரர்கள் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் எதிர்கொள்ளவேண்டிவரும்.
அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்திய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
அணிகள்
நியூஸிலாந்து: டெவன் கொன்வே, பின் அலென், கேன் வில்லியம்சன் (தலைவர்), க்லென் பிலிப்ஸ், மார்க் சப்மன், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், டிம் சௌதீ, இஷ் சோதி, லொக்கி பேர்குசன், ட்ரென்ட் போல்ட்.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கானி, நஜிபுல்லா ஸத்ரான், மொஹம்மத் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித்த கான், முஜீப் உர் றஹ்மான், பறீத் அஹ்மத் மாலிக், பஸால்ஹக் பாறூக்கி.