
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் இலங்கையை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த நமிபியா, இன்று நடைபெற்றுவரும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
மெல்பர்ன், ஜீலோங கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய நமிபியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் டிவான் டி கொக் (0) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததால் நமிபியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மைக்கல் வன் லிங்கென் (20), ஸ்டெஃபான் பார்ட் (19) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 30 ஓட்டங்களாக உயர்த்திபோது வன் லிங்கென் ஆட்டமிழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் மாத்திரம் சேர்நத நிலையில் ஜான் நிக்கல் (0) களம் விட்டகன்றார்.
எனினும் இலங்கைக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஆட்டநாயகனான ஜான் ப்றைலின்க் மீண்டும் அணியை மீட்டெடுப்பதில் பங்காற்றினார்.
ஸ்டெபான் பார்டுடன் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் கேர்ஹார்ட் இரேஸ்முஸுடன் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் ஜான் ப்றைலின்க் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார்.
ப்றைலின்க் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஸ்டெஃபான் பார்ட் 19 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
டேவிஸ் வைஸ் 11 ஓட்டங்களுடனும் ஜொஹானெஸ் ஸ்மித் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நெதர்லாந்து இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.