(நா.தனுஜா)

மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளபோது அக்கறையுடன் உதவும் நட்புநாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பது இலங்கையின் அதிஷ்டம் என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய சூழ்நிலையில் அவசியமான அனைத்து உத்தரவாதங்களுடனும் முன்நோக்கிப் பயணிப்பது சிறந்ததாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியியல் உத்தரவாதத்தை முதலாவதாக இந்தியாவும், அதனைத்தொடர்ந்து பாரிஸ் கிளப் உறுப்புநாடுகளும் வழங்கியிருந்தன.

இருப்பினும் இலங்கையின் மிகப்பாரியளவிலான இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா உரியவாறான உத்தரவாதத்தை வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் காண்பித்துவந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்துவெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக உத்தரவாதமளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (07) செவ்வாய்கிழமை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘தற்போதைய கடினமான சூழ்நிலையில் அக்கறையுடன் உதவக்கூடிய நட்புநாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பது இலங்கையின் அதிஷ்டமாகும்.

அவசியமான அனைத்து உத்தரவாதங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நாம் அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராக இருக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் பொறுமை ஆகியவற்றின் மூலம் எம்மால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்றும், ‘இலங்கையினால் முடியும்’ என்றும் அமைச்சர் அலி சப்ரி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *