பயங்கரவாத தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

(நா.தனுஜா)

பாராளுமன்ற அதிகாரத்தின்கீழ் உருவாக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது உண்மையைக் கண்டறிவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நீதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் ஏதுவான வகையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படக்கூடிய முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருப்பதனை உறுதிசெய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி 16 – 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன் அதன்போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்திருந்தனர். அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்பரிந்துரைகளில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கரிசனைக்குரிய விடயங்களில் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் விவகாரம் உள்ளடங்குவதுடன், வடமாகாண மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக சில கைதிகள் தமது வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்படும்வரை சுமார் 14 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பரிந்துரை செய்துள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான ஆலோசனைக்குழுவானது, சந்தேகநபரொருவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்படாமல் அவர் 14 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதன் மூலம் அரசியலமைப்பின்கீழ் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதுடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரமும் அவரது உரிமை மீறப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.

எனவே, சிறைக்கைதிகளுக்குப் பொறுப்பான அமைச்சு இவ்விவகாரம் தொடர்பில் உரிய தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவை தற்போது நல்லிணக்கத்துடன் தொடர்புடையதும் தீவிர கரிசனைக்குரியதுமான விடயங்களாக மாறியுள்ளன.

அதேபோன்று, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் சர்வதேச பொறிமுறையொன்றை ஆதரிக்கும் தரப்பினர், அரசாங்கத்தின் எத்தகைய கட்டுப்பாடுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடன் செயற்திறன்மிக்க, நேர்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி நிறுவப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ற உள்ளகப்பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்குக்கீழ் உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இயங்குவதற்கு அவசியமான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் அதேவேளை, தம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவேண்டும்.

மேலும், உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், நீண்டகாலமாக நிலவும் காணிப்பிரச்சினை, வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் விவகாரம், நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவகாரம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் அர்த்தபுஷ்டியுள்ள தீர்வை வழங்கவேண்டியது இன்றியமையாததாகும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வௌ;வேறு தரப்பினரால் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செயற்திறன்மிக்கவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருப்பது அவசியம் என்று வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று நீதியை நிலைநாட்டுவதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவான வகையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படக்கூடிய அதிகாரத்தை அந்த ஆணைக்குழு கொண்டிருக்கவேண்டும். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எந்தவொரு அரசியல்வாதியுடனோ அல்லது அவர்களின் குடும்பத்துடனோ தொடர்புபட்டிராதமையினை உறுதிப்படுத்தவேண்டும்.

அதன்படி, உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிசெய்வதை முன்னிறுத்திய வெற்றிகரமான உள்ளகப்பொறிமுறையாகத் திகழ்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிப்படைத்தன்மை, சுயாதீனத்தன்மை, செயற்திறனானதன்மை மற்றும் நேர்மை ஆகிய 4 முக்கிய கூறுகளைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

அடுத்ததாகப் போதைப்பொருள் கடத்தல் என்பது தீவிர கரிசனைக்குரிய விடயமாக மாறியுள்ள நிலையில், இதற்குத் தீர்வுகாண்பதற்கு நாட்டின் கரையோரப்பகுதிகளில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கின்றோம். இருப்பினும் புலனாய்வுத்தகவல்களை அடிப்படையாகக்கொண்ட அனைத்து மாகாணங்களுக்குமான பாதுகாப்புக்கொள்கையின் பிரகாரம் அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.

மேலும் மன்னாரில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இராணுவ சோதனைச்சாவடிகளில் பொதுமக்கள் பாரிய அத்துமீறல்களுக்கு உள்ளாவதாக அறியக்கிடைத்திருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்டவாறான அனைத்து மாகாணங்களுக்குமான பாதுகாப்புக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் வரையில் சோதனைச்சாவடிகளில் முன்னெடுக்கப்படும் சோதனைகளின்போது உடன் அமுலுக்குவரும் வகையில் மாற்றுவழிகளைக் கையாளுமாறு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவுறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று மன்னாரிலுள்ள மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமெனில், அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அட்டை கோரப்படுவது அடிப்படை உரிமை மீறலாகும். நாட்டின் ஏனைய பாகங்களில் அத்தகைய நடைமுறை அமுலில் இல்லாத நிலையில், அனைத்து மீனவர்களும் சட்டத்தின்முன் சமனான உரிமையைக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் விவசாயிகளின் காணிகள் இராணுவத்தினர், வனப்பாதுகாப்புத்திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அவர்கள் வாழ்வாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை எமது ஆணைக்குழுவின் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருக்கின்ற அதேவேளை, அதனைத் தீர்ப்பதற்கு நீங்கள் (ஜனாதிபதி) நடவடிக்கை எடுத்திருப்பதனால் அதுகுறித்து நாம் எவ்வித பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *