பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்னுக்கு நாளை (03) விஜயம் செய்யவுள்ளார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்யவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

நாளை வியாழக்கிழமை (03) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவர் பஹ்ரெய்னில் தங்கியிருப்பார் என வத்திகான் அறிவித்துள்ளது.

இஸ்லாத்துடனான உறவுகளை இவ்விஜயம் உறுதிப்படுத்தும் என நம்பப்படுவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

சிவில் மற்றும் திருச்சபை அமைப்புகளின் அழைப்பை ஏற்று பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் விஜயம் செய்யவுள்ளார் எனவும், தலைநகர் மனாமா, அவாலி ஆகிய நகரங்களுக்கு அவர் செல்வார் எனவும்  வத்திகான் ஊடக அலுவலக பணிப்பாளர் மெத்தேயோ புரூணி தெரிவித்துள்ளார்.

எகிப்திய தலைநகர் கெய்ரோவின் அல் அஸ்ஹர் பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் இமாம் ஷேக் அஹம்த் அல் தாயீப்பையும் பஹ்ரெய்னில் சந்திப்பதற்கு பாப்பரசர் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, ஷியா முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்துமாறு பஹ்ரெய்ன் மன்னர் ஹமட் பின் இஸா அல் கலீபாவை பாப்பரசர் வலியுறுத்துவார் என மனித உரிமை குழுக்கள் நம்புகின்றன.

மரண தண்டனை ரத்துச் செய்வதற்கும், சித்திரவதை குற்றச்சாட்டுகள், மற்றும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கான உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பாப்பரசர் வலியுறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *