பாகிஸ்தானா ? ஆப்கானிஸ்தானா ? பரபரப்பான போட்டி இன்று

ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறப் போகும் அணிகளைத் தீர்மானிக்கக்கூடிய பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இயடையிலான சுப்பர் 4 போட்டி ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் 07ஆம் திகதி புதன்கிழமை இன்று இரவு நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இலங்கையும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் அடுத்தடுத்த போட்டி முடிவுகளே இறுதிப் போட்டிக்கான அணிகளைத் தீர்மானிக்கும்.

ஆப்பகானிஸ்தான் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று கடைசி சுப்பர் 4 போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் வெற்றிகொண்டால் இந்த 3 அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருக்கும். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் இறுதிப் போட்டிக்கான அணிகள் நிகர ஓட்ட வேக அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

எனவே இன்று நடைபெறவுள்ள போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் விளையாடுவது உறுதி.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தத்து மைதானங்களாகக் கொண்டு விளையாடும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடுவது இதுவே முதல் தடவையாகும்.

எவ்வாறாயினும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் விளையாடப்பட்ட 2 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் (2013, 2019) பாகிஸ்தானே வெற்றிபெற்றுள்ளது. இதன்படி இரண்டு அணிகளும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் சந்திப்பது இது மூன்றாவது தடவையாகும். இம்முறை எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற ஒரு நிலை காணப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானை வீழ்த்தும் குறிக்கோளுடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கவுள்ளது.

ஏ குழுவுக்கான முதல் சுற்றில் தன்னைவிட தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் பங்களாதேஷையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்ட ஆப்கானிஸ்தான், சுப்பர் 4 சுற்றில் கடும் போட்டிக்குப் பின்னர் இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

மறுபுறத்தில் பி குழுவில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தபோதிலும் ஹொங்கொங்கை துவம்சம் செய்ததன் மூலம் பாகிஸ்தான் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சுப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்றது.

இந் நிலையில் இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான சுப்பர் 4 போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமானவையாகும்.

கடந்த சில காலமாக ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அணித் தலைவர் மொஹமத் நபி ஆகியோரின்   சுழல்பந்துவீச்சுகளில் பெரிதும் தங்கியிருந்த ஆப்கானிஸ்தானுக்கு இப்போது பஸால்ஹக் பாறூக்கி, நவீன் உல் ஹக் ஆகிய  வேக்பந்துவீச்சாளர்கள்    வெற்றியீட்டிக்கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

அத்துடன் நஜிபுல்லா ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறத்தில் அணித் தலைவர் பாபர் அஸாம் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய போதிலும்  பாகிஸ்தான்  அபார வெற்றிகளை ஈட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

மொஹமத் ரிஸ்வான், பக்கார் ஸமான், குஷ்தில் ஷா, மொஹமத் நவாஸ் ஆகியோர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துளளனர்.

அதேபோன்று சுழல்பந்துவீச்சாளரக்ளான ஷதாப் கான், மொஹமத் நவாஸ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவும் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தி 18 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் மற்றும் வீரர்களின் ஆற்றல்களை நோக்கும்போது இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று பலத்த சவாலாக விளங்கும் என்பதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் (பெரும்பாலும்)

பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, ஷதாப் கான், அசிப் அலி, மொஹம்மத் நவாஸ், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், மொஹமத் ஹஸ்நய்ன்.

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், மொஹமத் நபி (தலைவர்), கரிம் ஜனத், ராஷித் கான், அஸமத்துல்லா ஓமர்ஸாஸ், நவின் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பஸால்ஹக் பாறூக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *