
பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடும் மழை காரணமாக பல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏறக்குறைய 937 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மாண்டவர்களில் சுமார் 350 பேர் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 3 கோடி மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து மாநிலத்தில்தான் உயிர்பலி அதிகமாக இருக்கிறது. ஜூன் 14 முதல் கடந்த வியாழக்கிழமை வரை அங்கு 306 பேர் மரணமடைந்ததாக தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
பலுஜிஸ்தான், கைபர், பஞ்சாப் மாநிலங்களில் மரண எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் 37 பேர் வெள்ளத்தில் மாண்டுவிட்டதாக தகவல்கள் கூறின.
பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் பொதுவாக சராசரியாக 48 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இப்போது 166.8 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. சிந்து, பலுஜிஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள்தான் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக தென் பகுதியில் அதிக இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த ஆணையத்தில் அவசர செயல்பாட்டு அறை ஒன்றை பிரதமர் ஷரிஃப் அமைத்து இருக்கிறார். அந்த அமைப்பு, நாடு முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுகிறது என்று பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஷெரி ரஹ்மான் தெரிவித்தார்.
தொடர்ந்து மழை பெய்வதால் நிவாரணப் பணிகள் சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் முன் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது மழை பெய்து வருகிறது. பொதுவாக அந்த நாட்டில் நான்கு சுழற்சி பருவ மழைக்காலம்தான் இருக்கும்.
ஆனால் இப்போது எட்டாவது சுழற்சி தொடங்கி கடும் மழை பெய்து வருகிறது.
2010ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்கைவிட இப்போது படுமோசமான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்று பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தெரிவித்தார்.