பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றி கொண்டது இந்தியா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் சுப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது.

புவ்ணேஷ்வர் குமாரின் துல்லியமான பந்துவீச்சு, சகலதுறை வீரர்களான ரவிந்த்ர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 19ஆவது ஓரில் 14 ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் மேலும் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை விசிய மொஹம்மத் நவாஸ் தனது முதல் பந்தில் ரவிந்ந்ர ஜடேஜாவின் விக்கெட்டை நேரடியாக பதம் பார்த்தார்.

அடுத்த 2 பந்துகளில் இந்தியாவினால் ஒரு ஓட்டமே பெற முடிந்தது. 4 ஆவது பந்தை ஹார்திக் பாண்டியா, சிக்ஸாக விசுக்கி அடிக்க இந்தியா அபார வெற்றியீட்டியது.

இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

நசீம் ஷா வீசிய முதலாவது ஓவரின் 2ஆவது பந்தில் ஆரம்ப வீரர் கே.எல். ராகுல் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தமை இந்தியாவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.

எனினும் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியும் 2வது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலம் சேர்த்தனர்.

ஆனால், மொஹமத் நவாஸின் ஒரு ஓவரின் கடைசிப் பந்திலும் மற்றைய ஓவரின் முதல் பந்திலும் ரோஹித் ஷர்மா (12), விராத் கோஹ்லி (35) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க இந்தயா மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது. (53 – 3 விக்.).

துடுப்பாட்ட வரிசையில் 4ஆம் இலக்கத்துக்கு உயர்த்தப்பட்ட  ரவிந்ந்ர  ஜடேஜா தனக்கு கொடுத்த பொறுப்பை செவ்வனே ஆற்றும் வகையில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய இரசிகர்களின் முகங்களில் கவலை படிய தொடங்கியது.

எனினும் சகலதுறை வீரர்களான ரவிந்த்ர ஜடேஜா 35, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5 ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு வெற்றியை அண்மிக்கச் செய்தனர். ஜடேஜா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ஹார்திக் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும 7 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஹார்திக் பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்களினதும் கடை நிலை வீரர்களினதும் திறமையான துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானுக்கு சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

மொஹம்மத் ரிஸ்வானும் அணித் தலைவர் பாபர் அஸாமும் 2.4 ஓவர்களில் 15 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது, மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாபர் அஸாம் 10 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து ரிஸ்வானும் பக்கார் ஸமானும் 2ஆவது விக்கெட்டில் 19 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 42 ஓட்டங்களாக இருந்தபோது பக்கார் ஸமான் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டத்தை மொஹம்மத் ரிஸ்வானும் இப்திகார் அஹ்மதுவும் ஏற்படுத்தினர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இப்திகார் அஹ்மத் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 9 ஓட்டங்கள் சேர்ந்த பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

மொஹம்மத் ரிஸ்வான் (42), குர்ஷ்தில் ஷா (2), அசிப் அலி (9), மொஹம்மத் நவாஸ் (1), ஷதாப் கான் (10), நசீம் ஷா (0) ஆகிய 6 பேரும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

எனினும் கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஹரிஸ் ரவூப், ஷாநவாஸ் தஹானி ஆகிய இருவரும் 8 பந்துகளில் 19 ஓட்டங்களை விளாசி மொத்த எண்ணிக்கையை 147 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஷாநவாஸ் தஹானி 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஹரிஸ் ரவூப் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

19ஆவது ஓவரில் அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 விக்கெட்களை விழ்த்திய புவ்ணேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் ஹார்திக் பாண்டியாவும் 25 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *